தேனி மாவட்டத்திலுள்ள சண்முகசுந்தரபுரம் கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் கோபால். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும், அஜிதா என்ற 4 வயது பெண் குழந்தையும் இருக்கிறது. கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் தம்பதியினர் தன் குழந்தையை அருகில் வசித்து வரும் அண்ணன் வீட்டில் விட்டுவிட்டு பணிக்கு சென்று உள்ளனர். இங்கு இரண்டு கல் தூண்களுக்கு மத்தியில் துணி காய வைக்கும் கயிறு கட்டியிருந்தது.

இதன் அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பக்கத்தில் உள்ள கல் தூண் இடிந்து விழுந்தது. இதனால் சிறுமிக்கு தலை மற்றும் காதில் பலத்த அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. அதனைத்தொடர்ந்து வலியில் துடித்துடித்த சிறுமியை அருகில் இருப்பவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக இறந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கல் தூண் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.