அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த 48 வயதான ஜேசன் ஹட்சன் என்பவர், இணையத்தில் சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றியது தொடர்பாகக் குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் செய்த கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
2 வயதுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகளையும் அவர் சவுக்காலும், நெருப்பாலும் சுட்டு சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்தக் கொடூரச் செயல்களை அவர் வீடியோவாகப் பதிவு செய்து வைத்திருந்ததும், ஆயிரக்கணக்கான ஆபாசப் படங்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதும் விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது.
இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில், அவர் சொந்தக் குழந்தையையே பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியது தெரியவந்தது. இந்தச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தின.
இந்த வழக்கில் ஜேசனுக்கு எதிராக கற்பழிப்பு, இயற்கைக்கு மாறான பாலியல் உறவு மற்றும் குழந்தைகளை துன்புறுத்தியது உள்ளிட்ட 84 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நீதிபதி அமண்டா பாக்ஸ்லி அவருக்கு மொத்தம் 965 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் பேசும்போது, “அவன் ஒரு அரக்கன்; இனி அவன் என் வாழ்க்கையில் தலையிட முடியாது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், இந்தக் கொடூரச் செயலுக்கு உடந்தையாக இருந்த ஜேசனின் மனைவி ஃபாரென் ஜில் ஹட்சனுக்கும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகளைச் சித்ரவதை செய்த அரக்கனுக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, சமூகத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
