உலகப் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை மற்றும் தொழில்முனைவு குறித்துப் பேசியுள்ளார். அதில், “அமெரிக்காவில் குடியேறிய திறமை வாய்ந்த இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது.
அதாவது, இந்தியத் திறமையின் மிகப்பெரிய பயனாளியாக அமெரிக்கா இருந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லையில் கட்டுப்பாடு இல்லாவிட்டால் சட்டவிரோத குடியேற்றம் அதிகரிக்கும் என்றும், அதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனினும், திறமைசாலிகளுக்கு எப்போதுமே பற்றாக்குறை நிலவுவதால், வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களால்தான் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்றன என்றும், தங்கள் நிறுவனம் உலகிலுள்ள திறமைசாலிகளைப் பயன்படுத்த விரும்புகிறது என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தொழில்முனைவோர்கள் குறித்துப் பேசிய எலான் மஸ்க், அவர்கள் எப்போதும் கடுமையாக உழைக்க வேண்டும், தோல்விகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். புதிதாக எதையாவது உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் ரசிகன் தான் என்றும், பெரிதாகச் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு எப்போதும் தனது மரியாதை உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “நீங்கள் மகிழ்ச்சியை நேரடியாகத் தேட முடியாது. உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களைத் தேடிச் செல்லும்போதுதான் மகிழ்ச்சி தானாக வரும்” என்று கூறிய அவர், “நேரடியாகப் பணத்தைத் தேடிச் செல்வதை விட, சமூகப் பயன்பாட்டிற்கான பொருட்கள் அல்லது சேவைகளை உருவாக்கும்போது அதில் வருமானமும் தானாக வரும்” என்றும் தனது வெற்றிக்கான ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
