மனைவி கொல்லப்பட்ட குற்றச் சம்பவ இடத்தை (Crime Scene) அப்படியேப் பாதுகாத்து, கொலையாளியைக் கண்டுபிடிப்பதற்காக, ஒரு ஜப்பானியக் கணவர் 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு வாடகை செலுத்தி வந்துள்ளார்.

இந்த அசாதாரண முயற்சியால், அவர் மொத்தம் 22 மில்லியன் யென் (சுமார் ₹1.3 கோடி) செலவழித்துள்ளார். இந்த நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, முன்னாள் வகுப்புத் தோழி ஒருவரே குற்றத்தை ஒப்புக்கொண்டபோது, இந்த வழக்கில் அதிர்ச்சியூட்டும் திருப்புமுனை ஏற்பட்டது.

1999 ஆம் ஆண்டில், நமைகோ டகாபா (Namiko Takaba) என்ற 29 வயதுப் பெண் தனது குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவர் சடொரு டகாபா (Satoru Takaba), கொலையாளியைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில், அந்த வீட்டில் இருந்த இரத்தக் கறைகளைக் கூட அகற்றாமல், எந்தப் பொருட்களையும் நகர்த்தாமல், அடுத்த 26 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வாடகை செலுத்தி வந்தார்.

100,000க்கும் அதிகமான போலீசார் விசாரணை செய்தும் துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு அக்டோபரில், டகாபாவின் பள்ளித் தோழியான 69 வயதான குமைகோ யசுஃபுகு (Kumiko Yasufuku) காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். டகாபா மீது இருந்த பொறாமை (Jealousy) காரணமாகவே நமைகோவைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.

முந்தைய விசாரணையில் டி.என்.ஏ. (DNA) சோதனைக்கு மறுத்த அவர், 2024 ஆம் ஆண்டில் குற்றச் சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மறுபரிசோதனையுடன்  டி.என்.ஏ. ஒத்துப் போனதால், நீதி நிலைநாட்டப்பட்டது.