சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் சில தினங்களுக்கு முன்பு திருவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஒருவர், குற்றவாளிகளை தவெக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சினிமா பாணியில் பெயரிடப்பட்ட சிங்கப்பெண் சிறப்புப் படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதலமைச்சர் விஜய் அவர்கள், முதலில் அதனைத் தனது கட்சியினருக்குச் சொல்ல வேண்டும்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.