தமிழக அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே ஒரு கடுமையான வார்த்தைப் போராக மாறியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு, தவெக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மிகவும் காரசாரமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ‘நீட்’ தேர்வை நீக்கும் ரகசியம் தங்களுக்குத் தெரியும் என்று கூறி திமுக பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றியதாக தவெக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் மத்திய அரசால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்ற உண்மை தெரிந்திருந்தும், மாநில அரசால் அதைச் செய்ய முடியும் என்று உதயநிதியும் அவரது தந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து பொய்களை அவிழ்த்து விடுவதாக அந்த அறிக்கையில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வு ரத்தாகும் வரை மாணவர்கள் தங்களை வருத்திக் கொள்ளாமல், ‘நீட் மட்டுமே உலகம் இல்லை’ என்று தவெக தலைவர் விஜய் கூறிய நேர்மறையான கருத்துக்களை உதயநிதி தவறாகத் திரித்துக் கூறுவதாக தவெக சாடியுள்ளது.

இதனால் “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது” என்றும், “அப்பாவுக்காக தப்பு தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம்” என்றும் தவெக தங்களது அறிக்கையில் நேரடியாக உதயநிதியைத் தாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த புளுகு மூட்டைகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், தமிழக மக்கள் திமுகவை முழுமையாகப் புறந்தள்ளி ஓரமாக உட்கார வைத்துவிடுவார்கள் என்றும் தவெக தங்களது கண்டன அறிக்கையில் மிகத் தீவிரமாக எச்சரித்துள்ளது.