தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எழுந்த கேள்விகளுக்கும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:

தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்? “தமிழர்  என்பது ஒரு பகுதிதான். அவர் எனக்கு வேண்டிய நெருங்கிய நண்பர். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.”

அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து உங்கள் கருத்து? “எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்த அ.தி.மு.க.வை நான் பார்த்துள்ளேன். ஆனால் இன்றைய அ.தி.மு.க. நிலையைப் பற்றி நான் சொல்லவேண்டியது ஒன்றுமில்லை. அது அவர்களது கட்சி; அதில் தலையிட நான் விரும்பவில்லை.” தாமிரபரணி ஆற்றை தி.மு.க. தலைமுழுகி விட்டதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே? நயினார் பாவம். புதிதாக தலைவர் பதவிக்கு வந்திருக்கிறார். அதனால் தான் வேகமாக பேசுகிறார். சட்டசபையில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பது எங்களுக்கு தெரியும்.”

நடிகர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு  “நடிகர் விஜய் வெளியே வரட்டும், பின்னால் பார்ப்போம். அவர் சனிக்கிழமை சுற்றுப்பயணம் சென்றால் என்ன? வெள்ளிக்கிழமை சென்றால் நமக்கென்ன?” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் திருச்சியில் முதற்கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவர் சனிக்கிழமை மட்டும் தான் பிரச்சாரம் செய்வதாக ஒரு தகவல் பரவி வரும் நிலையில் தற்போது அந்த கேள்விக்கு அமைச்சர்களை முருகன் இவ்வாறாக பதில் வழங்கியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கதாகும்.