பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இருமுறை கால அவகாசம் கொடுத்தும் அதற்கு அவர் உரிய பதிலளிக்காததால் கட்சியிலிருந்து அவரை நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அதாவது அன்புமணி அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்காததால் அந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஏற்றுக்கொண்டதாக கருதப்படுகிறது.
எனவே பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்குவதாகவும் இந்த முடிவு சற்று வருத்தமாக இருந்தாலும் கட்சி நலனுக்காக இதை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் ராமதாஸ் கூறினார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: “கட்சியின் சட்ட விதிமுறைகளை மீறி, இதுவரை யாரும் இல்லாத அளவுக்கு தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார். பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அவரை பா.ம.க. செயல்தலைவர் பதவியிலிருந்து நீக்குவதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி பாமகவை அழிக்க முயற்சிக்கிறார் எனவும் ஒரு அரசியல்வாதியாகவே இருக்க தகுதியற்றவர் என்றும் ராமதாஸ் கூறிய நிலையில் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார் என்றார். நான் இல்லாமல் அன்புமணி வளர்ந்து இருக்க மாட்டார். இன்று முதல் என்னுடைய பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. அவரிடம் 10-15 பேர் மட்டுமே உள்ளனர் என்றார்.
அதன் பிறகு அன்புமணியிடம் ஏற்கனவே விருப்பப்பட்டால் தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என மூன்று முறை கூறியுள்ளேன். இப்போதும் நான் அதைத்தான் சொல்கிறேன் அன்புமணி வேண்டுமானால் தனியாக கட்சி தொடங்கிக் கொள்ளட்டும். மேலும் அன்புமணியை கட்சியில் இருப்பவர்கள் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது அதை மீறி தொடர்பு கொண்டால் அவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
