தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா (இலவச) பஸ் பயண அட்டைகள், இனி இணையதளம் வாயிலாகவே விண்ணப்பித்து பெறும் புதிய முறை அமலுக்கு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
மாற்றுத் திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் முதியோர் ஆகிய பயனாளிகளுக்கான கட்டணமில்லா பஸ் பாஸ் விண்ணப்ப முறையை, இலகுவாக்கும் நோக்கில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழ்நாடு பயணியர் மற்றும் பொருள் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக, இந்த புதிய முறை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
பயனாளிகள், தங்கள் அருகிலுள்ள அரசு இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பாஸ் அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெறும் வசதியும் உள்ளது.
மேலும், புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டணமில்லா பாஸ் அட்டைகள் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செல்லும். பயனாளிகள் இடையீடு இன்றி பயணிக்க, அவை அக்டோபர் 31-ஆம் தேதி வரை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
