பொதுவாகவே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிட்டு நமது நாட்டைப் பல விஷயங்களில் நாம் குறைத்து மதிப்பிடுவதுண்டு. ஆனால், ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் அதன் வேகம் அமைந்துள்ளதாக ஐரோப்பாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தள வீடியோ மூலம் பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் மருத்துவச் சிகிச்சைக்காக வந்திருந்த அந்தப் பெண்ணுக்கு, மருத்துவர்கள் சில இரத்தப் பரிசோதனைகளை (Blood Tests) செய்யப் பரிந்துரைத்துள்ளனர். பரிசோதனை செய்த அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதற்கான முடிவுகள் (Reports) அவரது கைக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவின் இந்த அசாத்திய வேகத்தைக் கண்டு வியந்த அந்த இளம்பெண், “எங்கள் ஐரோப்பிய நாடுகளில் ஒரு காபி ஆர்டர் செய்து குடிப்பது கூட இதைவிட மிகவும் சிக்கலான விஷயம்” என்று இந்தியாவின் மருத்துவச் சேவையை பாராட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் ஒரு மருத்துவரைச் சந்திப்பதற்கோ அல்லது சாதாரணப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கோ பல மாதங்கள், சில நேரங்களில் ஆண்டுகள் கணக்கில் கூட காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் அதிநவீனப் பரிசோதனைக் கூடங்கள் ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள்ளேயே நான்கைந்து எண்ணிக்கையில் பரந்து விரிந்துள்ளன.

இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லாமல், உடனடியாகத் தரமான சிகிச்சையைப் பெற முடிகிறது. கொரோனா போன்ற உலகளாவிய பேரிடர் காலத்திலேயே கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட இந்தியாவால் நிலைமையை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது இதற்குச் சான்றாகும். மிகக் குறைந்த செலவில், துரிதமான மற்றும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் கிடைப்பதால், வெளிநாட்டினர் பலர் தங்களது மருத்துவத் தேவைகளுக்காக இந்தியாவை நோக்கி வரும் ‘மருத்துவ சுற்றுலா தற்போது பெருமளவில் அதிகரித்து வருவதாக இந்த வீடியோவின் மூலம் தெரியவந்துள்ளது.

https://www.instagram.com/reel/DZSYYUqoe14/?igsh=MmNrYnltZWI2bm90