தற்காலச் சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் குடும்பங்களில், தங்களது வீட்டைப் பராமரிப்பதற்காக வீட்டு வேலைக்காரப் பெண்களை நம்பி ஒப்படைப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், அப்படி நம்பிச் சேர்த்த வேலைக்காரி ஒருவரே வீட்டின் உரிமையாளரின் பர்ஸிலிருந்து ரகசியமாகப் பணம் திருடிய அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பிரபல டிஜிட்டல் கிரியேட்டரான ஷிவானி ஜாங்க்டா என்பவரது வீட்டில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பணம் காணாமல் போயுள்ளது. ஆரம்பத்தில் தனது மறதியாக இருக்கும் என்று நினைத்த ஷிவானிக்கு, தொடர்ந்து பணம் காணாமல் போகவே வீட்டில் வேலை செய்யும் பெண் மீது சந்தேகம் எழுந்துள்ளது. உண்மை என்ன என்பதைக் கண்டறிய, தனது வீட்டில் யாரும் அறியாத வண்ணம் ஒரு ரகசிய கேமராவை அவர் பொருத்தியுள்ளார்.

https://www.instagram.com/reel/DZWoHvrh7Y2/?igsh=cHNwYjQzaXJjMzI0

இதனையடுத்து, திட்டமிட்டபடி ரகசிய கேமரா இருக்கும் பகுதிக்கு நேராகத் தனது பணப்பையை ஷிவானி வைத்துள்ளார். வேலைக்கு வந்த அந்தப் பெண், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லாத நேரத்தில் பர்ஸைத் திறந்து ரகசியமாகப் பணத்தைத் திருடுவது அந்த கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து ஷிவானி கேள்வி எழுப்பியபோது, ஆரம்பத்தில் மறுத்த அந்தப் பெண், ஆதாரத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து தனது தவற்றை ஒப்புக்கொண்டார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. எனினும், தவறு செய்த வேலைக்காரப் பெண் தனது செயலுக்கு வருந்தி, புகார் அளிக்க வேண்டாம் என்று கண்ணீருடன் கேட்டுக்கொண்டதால், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் ஏதுமின்றி அவரை எச்சரித்து குடும்பத்தினர் அனுப்பியுள்ளனர். இந்த வீடியோவை ஷிவானி இணையத்தில் பகிரவே, “யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்” என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.