ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சொர்லிகாம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான ஹரிணி (24), தனது காதலனுடன் சேர விவாகரத்து கேட்டதால், பெற்ற தாய் மற்றும் தாத்தாவால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹரிணிக்கு கடந்த 2020ஆம் ஆண்டு வெங்கடேஸ்வர்ராவு என்பவருடன் திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், ஐதராபாத்தில் தங்கி குரூப்-2 தேர்வுக்காகப் படித்து வந்த ஹரிணிக்கு, அங்குள்ள பயிற்சி மையத்தில் நாகேந்திரா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்த ஹரிணி, தான் நாகேந்திராவைத் திருமணம் செய்ய விரும்புவதாகவும், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கித் தருமாறும் கோரியிருந்தார். இதனால் குடும்பக் கௌரவம் பாதிக்கப்படும் என அஞ்சிய அவரது தாய் விஜயகுமாரி மற்றும் தாத்தா பாலு ஆகியோர் ஹரிணியைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினர்.

விவாகரத்து வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஹரிணியை ஊருக்கு வரவழைத்த குடும்பத்தினர், கடந்த மே 31-ஆம் தேதி நள்ளிரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த போது  தாய் விஜயகுமாரி மகளின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, தாத்தா பாலு இரும்பு கம்பியால் ஹரிணியின் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர், இந்த விபரத்தை ஹரிணியின் கணவருக்குத் தொலைபேசியில் கூறி வரவழைத்ததோடு, அவர் மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடி உடலை அவசர அவசரமாகத் தகனம் செய்துள்ளனர்.

முன்னதாக, ஊருக்கு வரும்போதே தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த ஹரிணி, “நான் ஒரு வாரத்தில் திரும்பி வராவிட்டால் போலீசில் புகார் செய்” என்று தனது காதலனுக்கு ஒரு ‘செல்பி’ வீடியோவை அனுப்பியிருந்தார். அதன்படியே, ஹரிணி வராததால் காதலன் நாகேந்திரா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் இந்த கொலை அம்பலமானது. இதனைத் தொடர்ந்து ஹரிணியின் தாய், தாத்தா மற்றும் கணவர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.