சென்னையின் கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கிக்குள்ளே புகுந்த நபர் ஒருவர், அங்கே பணிபுரிந்து வந்த தனது மனைதியைச் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரத்தில் இருந்த சதீஷ் என்பவர், தனது மனைவியைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண் எதிரே நடந்த இந்தத் திடீர் வெறிச் செயலால் அங்குப் பணியில் இருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அலறி அடித்து ஓடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகி மக்களை உலுக்கியுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம், இதே சதிஷ் தனது சொந்த 7 வயது மகளைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் கைதாகிச் சிறை சென்று வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கில் இருந்து வெளியே வந்துகூட அவனது வன்மம் அடங்காமல், தற்போது தனது மனைவியின் உயிரைப் பறிக்க முயன்றிருப்பது பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கியில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை மிகக் கொடூரமாகத் தாக்கிய இந்தச் சதிஷை அங்கிருந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாகப் பிடிக்க முயன்றனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த கீழ்ப்பாக்கம் காவல் துறையினர், தப்பியோட முயன்ற குற்றவாளி சதிஷைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். படுகாயமடைந்த பெண் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
