மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு பகுதியைச் சேர்ந்த சக்ஷம் தாடே மற்றும் ஆஞ்சல் மாமிட்வார் ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சாதி மறுப்பு காரணமாக ஆஞ்சலின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், ஆஞ்சலின் தந்தை மற்றும் சகோதரர்கள் சேர்ந்து, சக்ஷமை நயவஞ்சகமாக அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொலை செய்தனர். காதலனின் மரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆஞ்சல், தனது சொந்தக் குடும்பத்தினரையே எதிர்த்து சக்ஷமின் வீட்டிற்குச் சென்றார்.

அங்கு சக்ஷமின் உடலுக்கு முன்பாக தனக்குத்தானே மஞ்சள் பூசி, அவரது நெற்றியில் குங்குமம் இட்டு பிணத்துடன் திருமணம் செய்துகொண்டார். “உங்கள் மகன் மறைந்தாலும், என் வாழ்நாள் முழுவதும் நான் இந்த வீட்டிலேயே இருந்து உங்களைப் பெற்ற தாயைப் போலக் கவனித்துக் கொள்வேன், உங்களை விட்டுப் போக மாட்டேன்” என்று சக்ஷமின் தாயிடம் ஆஞ்சல் கண்ணீருடன் சபதம் செய்தார்.

மகனின் மரண அதிர்ச்சியில் சக்ஷமின் தந்தையும் அடுத்த சில நாட்களில் உயிரிழந்தார். இதனால் சக்ஷமின் தாய் சங்கீதா தாடே மற்றும் மருமகள் ஆஞ்சல் ஆகிய இருவரும் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்தனர். தனது காதலனின் மரணத்திற்கு நியாயம் கேட்டுப் பல போராட்டங்களிலும் ஆஞ்சல் முன்னின்று நடத்தினார். ஆனால், இந்த உருக்கமான சம்பவ நடந்து வெறும் 8 மாதங்களே ஆன நிலையில், கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன்பு ஆஞ்சல் தனது மாமியாரைத் தனியாகத் தவிக்கவிட்டுவிட்டு திடீரென வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மேலும் தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை, வீட்டிற்குச் சென்று வருகிறேன் என்று கூறிச் சென்ற ஆஞ்சலை, அவளது மாமியாரே கொண்டு போய் விட்டுள்ளார். ஆனால், அதன்பிறகு ஆஞ்சல் மாமியாருடன் எந்தத் தொடர்பும் கொள்ளவில்லை. தனது சொந்தக் குடும்பத்தினர் சக்ஷமைக் கொலை செய்த நிலையிலும், ஆஞ்சல் மீண்டும் தனது சொந்த வீட்டிற்கே சென்றுவிட்டாரா அல்லது எங்கு இருக்கிறார்? என்ற விபரம் தெரியாமல் சக்ஷமின் தாய் தவித்து வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.