இந்தியா – வங்கதேச எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பாதுகாப்பு குறித்த பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இந்திய எல்லைக்குள் புகுந்து அங்கிருந்த பயிர்களையும், காய்கறிகளையும் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் திருடிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், பசுமையான விவசாய நிலங்களுக்குள் புகுந்த வங்கதேசத்தினர் சிலர், அங்கிருந்த சிறிய செடிகளை வேரோடு பிடுங்குவதும், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளைத் திருடிக்கொண்டு தப்பியோடுவதும் பதிவாகியுள்ளது. அப்போது அங்கு வந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்கள், அவர்களை எல்லையை விட்டு விரட்டியடிப்பதும் அந்த வீடியோவில் காண முடிகிறது. இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

வங்கதேசத்தினர் இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவதாக இந்தியத் தரப்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்திய அதிகாரிகள் தங்களை வலுக்கட்டாயமாகத் தள்ளுவதாக வங்கதேசம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படைகளின் உயர்மட்டக் கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே இந்தத் திருட்டு வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய எல்லைப் பகுதிகளில் பயிர்களைச் சேதப்படுத்துவது, மரங்களை வெட்டுவது மற்றும் சட்டவிரோத ஊடுருவல் போன்ற சம்பவங்கள் நீண்டகாலமாக நடந்து வருவதாகக் கூறும் நெட்டிசன்கள், நமது நாட்டின் விவசாயத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய எல்லைப் பகுதியில் உடனடியாக முழுமையான கம்பி வேலி  அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.