விடாமுயற்சியும், முறையான திட்டமிடலும் இருந்தால் நினைத்த இலக்கை நிச்சயம் அடையலாம் என்பதை டெல்லியைச் சேர்ந்த ஜினியா அரோரா என்ற இளம் பெண் நிரூபித்துக் காட்டியுள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில், அகில இந்திய அளவில் 6-வது இடத்தைப் பிடித்து ஜினியா அரோரா சாதனை படைத்துள்ளார். கடந்த முறையே இத்தேர்வை எழுதிய அவர், 156-வது இடத்தைப் பிடித்து இந்தியக் காவல் பணிக்கு (IPS) தேர்வாகியிருந்தார். இருப்பினும், உலக அரங்கில் இந்தியாவின் முகமாகச் செயல்படும் இந்திய வெளியுறவுப் பணியில் (IFS) சேர வேண்டும் என்பதே அவரது லட்சியக் கனவாக இருந்தது.

இதற்காகத் தனது ஐ.பி.எஸ் பணியில் இருந்துகொண்டே, மீண்டும் தீவிரமாகப் படித்து, தனது விடை எழுதும் திறனை மேம்படுத்தி, நடப்பு நிகழ்வுகளில் கூடுதல் கவனம் செலுத்தினார். அதன் பலனாக, அடுத்த வருடமே தனது தரவரிசையை அசுர வேகத்தில் உயர்த்தி, டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்து தனது வெளியுறவுத் துறை கனவை நனவாக்கியுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பிரிவில் பட்டம் பெற்ற ஜினியா அரோரா, தனது அசுர வெற்றியின் ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார். தினமும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து படிப்பதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்த அவர், ஒரு நாளைக்குச் சராசரியாக 8 மணி நேரம் முழு கவனத்துடன் படிப்பதே வெற்றிக்கு போதுமானது என்கிறார்.

தனது படிப்பு நேரத்தைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்ட அவர், இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து படிப்பது, நண்பர்களுடன் குழுவாக விவாதிப்பது மற்றும் படிப்பு தொடர்பான பாட்காஸ்ட்களைக் கேட்பது போன்ற உத்திகளைக் கையாண்டுள்ளார். தேர்வுகள் நெருங்கிய இறுதி மாதத்தில், தனது படிப்பு நேரத்தை 11 முதல் 12 மணி நேரமாக உயர்த்தியதாகவும், அதிகப்படியான மாதிரித் தேர்வுகளை  எழுதிப் பார்த்ததே பதற்றமின்றி முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள உதவியதாகவும் ஜினியா அரோரா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.