புதிய வேலைக்குச் செல்லும் முதல் நாளில், அங்குள்ள சூழலைப் பழகிக் கொள்வதிலும், வேலைகளைக் கற்றுக் கொள்வதிலும் யாருக்கும் சற்று கூடுதல் நேரம் தேவைப்படுவது இயல்புதான். ஆனால், துரித உணவு உணவகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது முதல் நாள் வேலையைத் தொடங்கிய வெறும் 3 மணி நேரத்திலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தனக்கு துரித உணவு உணவகங்களில் இதற்கு முன்பு வேலை செய்த அனுபவம் ஏதுமில்லை என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிட்டு, முறைப்படி உடை அணிந்து, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே அந்த இளைஞர் வேலைக்குச் சென்றுள்ளார். முதல் ஒரு மணி நேரம் பர்கர் தயாரிக்கும் முறைகளைக் கவனித்த அவர், பின்னர் வந்த வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை பேக்கிங் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், அனுபவம் இல்லாததால் அவரால் மற்ற ஊழியர்களைப் போல அதிவேகமாகச் செயல்பட முடியவில்லை. வெறும் 4 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அவர் ஆர்டர்களை வழங்கிய நிலையில், உணவகத்தின் உரிமையாளர் அவரைத் தனியே அழைத்து, “இந்த வேலை உனக்குச் செட் ஆகாது” என்று கூறி உடனடியாகப் பணிநீக்கம் செய்துள்ளார். மேலும், “இங்கு பணிபுரிய இயல்பான வேகம் வேண்டும், சனிக்கிழமை கூட்ட நெரிசலை உன்னால் சமாளிக்க முடியாது” என்று கூறிய உரிமையாளர், அவர் வேலை செய்த 3 மணி நேரத்திற்கான சம்பளத்தைக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அந்த இளைஞர் ரெடிட் இணையதளத்தில் பகிரவே, நெட்டிசன்கள் மத்தியில் இது பெரும் விவாதப் பொருளானது. ஒரு புதியவர் தவறு செய்து கற்றுக் கொள்வதற்குக் கூட முதலாளிகள் நேரம் கொடுப்பதில்லை என்றும், அனுபவமில்லாதவர்களிடம் முதல் நாளே நூறு சதவீதத் திறமையை எதிர்பார்ப்பது அநியாயம் என்றும் ஒரு தரப்பினரும்; துரித உணவுத் துறையில் வேகம் மிக முக்கியம் என்பதால் உரிமையாளரின் முடிவு சரியே என்று மறுதரப்பினரும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
