விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சின்னக் கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி சுவாதி. இவர்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், விஷ்ணு பிரியா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது. குடிபோதைக்கு அடிமையான துரைப்பாண்டி எப்போதாவது வீட்டிற்கு வருவார் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகத் தாய் வீட்டில் தங்கி சுவாதி பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
அப்போது சுவாதிக்குத் தன்னுடன் வேலை பார்த்த சிவகாசி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய விக்னேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்த நிலையில், நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இது குறித்துத் தனது பெற்றோர் மற்றும் தாயிடம் கூறிய சுவாதி, விக்னேஸ்வரனுடன் வீடு எடுத்து வாழப் போவதாகக் கூறியுள்ளார். இதற்குச் சுவாதியின் தாய் மறுப்புத் தெரிவித்த போதிலும், விக்னேஸ்வரனுடன் சேர்ந்து வாழ நினைத்த சுவாதி கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிவகாசி நகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் விநாயகர் காலனி பசும்பொன் நகரில் தனியாக வீடு எடுத்து விக்னேஸ்வரனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், விக்னேஸ்வரனும் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், தினமும் குடித்துவிட்டு சுவாதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வழக்கம் போல நேற்று இரவும் குடும்பத் தகராறு ஏற்பட்ட போது ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், சுவாதியின் 3 வயது மகள் விஷ்ணு பிரியாவைத் தரையில் சரமாரியாகத் தாக்கியும், முடியைப் பிடித்து இழுத்தும் இரவு முழுவதும் சித்ரவதை செய்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் விக்னேஸ்வரனுடன் வாக்குவாதம் செய்த சுவாதி நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. எனவே மீண்டும் குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு சுவாதி வீட்டிற்குச் சென்ற நிலையில், அவரிடம் “நான் போலிசில் போய் சரணடைகிறேன், இருவரும் சேர்ந்து செல்ல ஆட்டோ அழைத்து வருகிறேன்” எனக் கூறிவிட்டு விக்னேஸ்வரன் தப்பிச் சென்றுள்ளார்.
தொடர்ந்து குழந்தை உயிரிழந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், குழந்தையின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாகச் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தப்பியோடிய விக்னேஸ்வரனைக் கைது செய்த போலீசார், குழந்தை கொலை செய்யப்பட்டதற்கான முழுமையான பின்னணி குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளத்தொடர்பு மற்றும் குடும்பத் தகராறு காரணமாக 3 வயது பெண் குழந்தை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
