கரூர் சின்னாண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு பாடம் நடத்தி ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே சக மாணவர்களும் பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சி அடையும் வகையில் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக புவனா என்பவரும், இடைநிலை ஆசிரியையாக கலைமதி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, இடைநிலை ஆசிரியை கலைமதி பள்ளியில் முறையாகப் பணியாற்றவில்லை என்றும், அவரது பணி மீது சில புகார்கள் இருப்பதாகவும் தலைமை ஆசிரியை புவனா கல்வித்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
View this post on Instagram
இந்த விவகாரத்தால் இருவருக்கும் இடையே புகைச்சல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கல்வித்துறையில் புகார் அளித்த ஆத்திரத்தில் இருந்த ஆசிரியை கலைமதி, தலைமை ஆசிரியை புவனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தகராறாக மாறி, பள்ளியின் வளாகத்திலேயே இருவரும் ஒருவரையொருவர் முடிவுகளைப் பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கிக் கொண்டனர்.
பள்ளி நேரம் என்பதால், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்முன்னே நடந்த இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே பள்ளிக் கூடத்தில் இப்படி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்ட செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
