தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த காலத் தேர்தல்களில் தமிழக மக்கள் உச்சபட்ச வாக்குப்பதிவை வழங்கி இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்ததாகத் தேர்தல் ஆணையம் பாராட்டிய போதிலும், உரிய நேரத்தில் இடைத்தேர்தல்களை நடத்தாமல் தேர்தல் ஆணையம் தாமதித்து வருவது பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, திருச்சி (கிழக்கு), மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 7 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால், சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளை இழந்து தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு எந்தவிதமான தேர்தல் வழக்குகளோ அல்லது சட்டத் தடைகளோ கிடையாது. எனவே, அங்கு உடனடியாகத் தேர்தல் அறிவிப்பு வெளியிட எந்தவிதமான தடையுமில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

மேலும், மீதமுள்ள 5 தொகுதிகளில் உள்ள தேர்தல் வழக்குகளையும் நீதிமன்றத்தில் விரைந்து மேல்முறையீடு செய்து சட்டச்சிக்கல்களைத் தீர்க்கத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 151A-இன் படி, காலியான தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற சட்ட விததியையும் பொதுமக்களும் இளைஞர்களும் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஏற்கனவே பெரும்பாலான தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்து தேர்தல் துறைக்கான களப்பணிகள் முடிந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு மட்டுமே தாமதமாகி வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால், அந்தந்தத் தொகுதி மக்களின் குறைகள், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கோரிக்கைகளைக் சட்டமன்றத்தில் குரல் கொடுத்துப் பெற முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மக்களின் குரலாகச் செயல்பட வேண்டிய பாலமான சட்டமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாததால் வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன.

“>

 

எனவே, தேர்தல் ஆணையமும் மத்திய உள்துறை அமைச்சகமும் உடனடியாகத் தலையிட்டு, சட்டச்சிக்கல்களை விரைந்து களைந்து தமிழகத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் காலதாமதமின்றி இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் தற்போதைய முக்கியக் கோரிக்கையாக உள்ளது.