தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன், தமிழக அமைச்சரவையில் முதல் கட்டமாக மிகப்பெரிய அளவில் மாற்றங்களைச் செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறமையின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர் புகார்களுக்கு ஆளாகியுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ. விஜய் தமிழ் வழியன் பார்த்திபன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து அதிரடியாக நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கட்சித் தொண்டர்கள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் தொடர்பிலான சர்ச்சைகளில் சிக்கியுள்ள சமூக நலத்துறை அமைச்சர் கே. அகிலேசுவரி மற்றும் சமீபத்திய சர்ச்சைகளில் சிக்கியுள்ள மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் டி. சரத்குமார் ஆகியோரின் பதவிகளும் கடும் அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.

அதுமட்டுமின்றி, எஸ். கீர்த்தனா மற்றும் எஸ். கமலி ஆகியோரது இலாக்காக்களும் மாற்றப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாகச் சீர்திருத்தத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவை மாற்றமானது முதல் கட்டம் மட்டுமே என்றும், இடைத்தேர்தல்களுக்குப் பிறகு அரசியல் கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட இரண்டாம் கட்ட அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதில் முன்னாள் அதிமுக தலைவர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் மரகதம் குமரவேல் உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

தூய்மையான நிர்வாகத்தையும் புதிய அரசியல் கலாச்சாரத்தையும் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தவெக, முறையான செயல்பாடுகள் இல்லாத அமைச்சர்களை நீக்குவது வரவேற்கத்தக்க படியாகும் என்றாலும், கடைசி நேரத்தில் கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது எந்தளவிற்கு நியாயமானது என்ற கேள்விகள் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

“>

 

கட்சியைத் தரைமட்டத்தில் இருந்து கட்டி எழுப்பிய உண்மையான விசுவாசிகளுக்கும் உழைத்தவர்களுக்கும் முதலிடம் வழங்குவதே மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக அமையும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.