கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், தவறான உறவில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையைக் கொன்று தென்னந்தோப்பில் வீசிய தனியார் மருத்துவமனைச் செவிலியரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில், தொப்புள் கொடியுடன் கூடிய ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக வடசேரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் தலைமையிலான போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தவறான உறவில் பிறந்ததால் குழந்தை கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதையடுத்து அந்தத் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, அங்கிருந்த நர்ஸ் ஒருவர் சில நாட்களாக வயிறு வலிப்பதாகக் கூறிச் சரிவரப் பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
உடனடியாக அந்த நர்ஸைத் தேடிச் சென்றபோது, அவர் உடல்நலக்குறைவால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது தெரியவந்தது. அங்குச் சென்று போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், முதலில் எதுவுமே தெரியாது என மறுத்தவர், பின்னர் அக்குழந்தை தனக்குப் பிறந்ததுதான் என்பதை ஒப்புக்கொண்டார்.
விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த நர்ஸ் ராமலெட்சுமி (22) என்பதும், திருமணமாகாத அவர் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், காதலனுடன் இருந்த நெருக்கத்தால் கருத்தரித்ததும் தெரியவந்தது. பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்ததால் பயத்தில் தோப்பில் வீசியதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், குழந்தை கொலை செய்யப்பட்டதா அல்லது இறந்து பிறந்ததா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது நர்ஸ் ராமலெட்சுமி கைது செய்யப்பட்டு, மருத்துவமனை சிகிச்சைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
