திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. இங்கு சுரேஷ் (15) என்ற சிறுவன் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, ரகசியமாகப் புதைக்கப்பட்ட திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது பாலமுருகன் (40) என்பவருக்குச் சொந்தமான அந்தப் பண்ணையில், கணவரை இழந்த வெண்ணிலா (38) என்ற பெண், தனது மூன்று மகன்களுடன் கடந்த 6 மாதங்களாகத் தங்கி வேலை செய்து வந்தார்.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில், பண்ணையில் கோழிகள் குறைந்ததற்கும், பக்கத்து நிலத்தில் ஆடுகள் மேய்ந்ததால் ஏற்பட்ட தகராறுக்கும் சிறுவன் சுரேஷ் தான் காரணம் எனக் கூறி, பண்ணை உரிமையாளர் பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் வினோத் (20) ஆகியோர் சிறுவனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலில் சிறுவன் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
கொலையை மறைப்பதற்காகச் சிறுவனின் உடலைத் தோண்டிப் புதைத்த கொலையாளிகள், “இதை வெளியில் சொன்னால் உன்னையும், மற்ற மகன்களையும் கொன்றுவிடுவோம்” என வெண்ணிலாவை மிரட்டியுள்ளனர். மேலும், கடந்த 4 மாதங்களாக வெண்ணிலாவையும் அவரது குழந்தைகளையும் கோழிப்பண்ணையிலேயே சிறைபிடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். ஒருவழியாக அங்கிருந்து தப்பிய வெண்ணிலா, திருத்தணி காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த பாலமுருகன், அவரது மனைவி புவனேஸ்வரி, வினோத் உள்ளிட்ட 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் அதிகாரிகள் முன்னிலையில், புதைக்கப்பட்ட சுரேஷின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
