திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்த சுரேஷ் என்ற சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு, சடலம் ரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த பிப்ரவரி மாதம் இந்த கொடூரக் குற்றம் நடந்துள்ள நிலையில், அச்சத்தில் உறைந்திருந்த சிறுவனின் தாய் வெண்ணிலா, சமீபத்தில் பண்ணையிலிருந்து தப்பித்துச் சென்று திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் கணவனை இழந்த வெண்ணிலா, தனது மூன்று மகன்களுடன் முருகு என்பவரின் மாட்டுப் பண்ணையில் கடந்த ஏழு மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். பண்ணை உரிமையாளர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் ஏற்பட்ட தகராறில், பண்ணையிலிருந்த கால்நடைகளும் கோழிகளும் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பண்ணை உரிமையாளர் முருகு, அவரது உறவினர் புவனா மற்றும் சிறுவனின் குடும்ப உறவினரான வினோத் ஆகிய மூவரும் சேர்ந்து கட்டையால் சுரேஷை கொடூரமாகத் தாக்கியதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

இதனை தொடர்ந்து கொலையை மறைப்பதற்காக, குற்றவாளிகள் மூவரும் சேர்ந்து சிறுவனின் உடலை பண்ணை வளாகத்திற்குள்ளேயே ரகசியமாகப் புதைத்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தைப் பற்றி வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகத் தாயை மிரட்டி, பண்ணையிலேயே அடைத்து வைத்துள்ளனர். குற்றவாளிகள் வெளியில் சென்ற சமயம் பார்த்து பண்ணையிலிருந்து தப்பித்த தாய், போலீசாரிடம் கண்ணீருடன் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட திருத்தணி நகர போலீசார், பண்ணை உரிமையாளர் முருகு, புவனா மற்றும் வினோத் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளின் முன்னிலையில் சிறுவனின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.