“ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை விட, கடந்த பி.ஆர்.எஸ் ஆட்சியில் தான் தெலுங்கானா மாநில நீர்ப்பாசன திட்டங்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஹரிஷ் ராவ் ஆகியோரை தூக்கிலிட்டாலும் தவறில்லை” என்று தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். தெலுங்கானா சட்டசபையில் ஆற்று நீர் பங்கீடு மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தாக்கல் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்று நீர் பங்கீட்டில் பி.ஆர்.எஸ் அரசு மாநிலத்தின் நலனை அடகு வைத்துவிட்டது. தெலுங்கானா கவிஞர் கலோஜி நாராயணா ராவ் கூறியது போல, நம்மைச் சுரண்டும் நம் பகுதி மக்களையே உயிருடன் புதைக்க வேண்டும் என்ற வரிகள் இவர்களுக்குத்தான் பொருந்தும். தெலுங்கானா பிரிவினைக்கு எதிராகச் செயல்பட்ட முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டியின் நிலைப்பாட்டை இவர்களும் எடுத்ததால், மாநிலத்திற்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது,” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
ரேவந்த் ரெட்டியின் இந்த ‘தூக்கு’ குறித்த சர்ச்சை பேச்சுக்கு பி.ஆர்.எஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் ஹரிஷ் ராவ், “ரேவந்த் ரெட்டி பொய்களின் தூதராக மாறிவிட்டார். தனது தோல்விகளை மறைக்க இதுபோன்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார். ஒரு முதலமைச்சர் அந்தஸ்தில் இருப்பவர் பயன்படுத்த வேண்டிய மொழியா இது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியத்திடம் திட்டங்களை ஒப்படைத்ததன் மூலம் காங்கிரஸ் அரசுதான் துரோகம் இழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பி.ஆர்.எஸ் தொண்டர்கள், மாநிலம் முழுவதும் ரேவந்த் ரெட்டியின் உருவ பொம்மையை எரித்துத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இதனால் தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
