தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வருகை குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சிவகுமாரின் கருத்து தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்த விஜய், தற்போது முழுமையாகச் சினிமாவிலிருந்து விலகி, அரசியலில் தடம் பதித்துள்ளார். 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, அவரது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரைப்பிரபலங்களிடம் விஜய்யின் அரசியல் மற்றும் அவரது ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த கேள்விகள் எழுப்பப்படுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது செய்தியாளர்கள் நடிகர் சிவகுமாரிடம் கேள்வி எழுப்பினர். அதாவது விஜய் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவர் தமிழகத்தின் முதலமைச்சராக வாய்ப்புள்ளதா?” என்று கேட்டனர்.
அவர் (முதலமைச்சராக) வந்தே ஆக வேண்டும் என்று மக்கள் நினைத்துவிட்டால், நிச்சயம் வந்துவிடுவார்” என மிகவும் சுருக்கமாகவும், அதே சமயம் அழுத்தமாகவும் தனது கருத்தைப் பதிவு செய்தார். மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் திரைத்துறையின் மூத்த கலைஞர் ஒருவரின் இந்த பதில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
