இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகத்திற்குப் பெயர்போன இயக்கம் திமுக தான்; மத்திய அரசே இதனை ஒப்புக்கொண்டுள்ளது” என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இ.பெரியசாமி, டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு தாமதம் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்தார். அவர் கூறியதாவது,  நிர்வாகத் திறமை இல்லை என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசே சான்றளித்துள்ளது.

தமிழக அரசு அதிக கடன் வாங்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், ரூ.5.5 லட்சம் கோடி கடனை வைத்துச் சென்றது அதிமுக அரசுதான். அதற்கான வட்டியைக் கணக்கிட்டாலே உண்மை தெரியும்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி.யின் விமர்சனங்களுக்கு அமைச்சர் பதிலளிக்கையில், “நாங்கள் கட்டுப்பாடான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். மாணிக்கம் தாகூர் தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. கட்சியின் மேலிடத் தலைவர்கள் சொன்னால் மட்டுமே அதற்குப் பதில் சொல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.

திமுக அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து அவர் மேலும் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த வாரம் 10,000 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் பேரின் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டது. அதனை தற்போது சரி செய்து, தகுதியுள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கி வருகிறோம்.

மேலும் மூலதனத்தை உருவாக்குவதற்கும், விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் நன்மை செய்வதற்காகவே அரசு கடன் பெற்றுத் திட்டங்களைச் செயல்படுத்துவதாக அவர் விளக்கமளித்தார்.