சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது, ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ரசிகர்கள் கொண்டு வந்த விசில்கள் மைதான வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. இது சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) விளக்கமளித்துள்ளது. இந்தத் தடையானது ஐசிசி (ICC) அல்லது பிசிசிஐ (BCCI) விதித்தது அல்ல என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை காவல்துறையினர் எடுத்த முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சேப்பாக்கத்தில் நடைபெறும் மற்ற உலகக் கோப்பை போட்டிகளுக்கும் விசில் கொண்டு செல்ல அதிகாரப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மைதானத்திற்குள் எடுத்துச் செல்லக் கூடாத பொருட்களின் பட்டியலில் ‘விசில்’ புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் சின்னமாக ‘விசில்’ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் காரணங்களுக்காகவே அரசு இந்தத் தடையை ஏற்படுத்தியுள்ளதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக மாநில ஒருங்கிணைப்பாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது: “இன்று சேப்பாக்கத்தில் விசிலுக்குத் தடை போடுவார்கள். நாளை பேருந்து நடத்துனர்களிடம் இருக்கும் விசிலைப் பறிப்பார்கள். அப்புறம் போலீசாரிடம் இருந்தும் விசிலைப் பிடுங்குவார்கள். ஆனால், எங்களது தம்பிகள் விசில் இல்லாமலேயே கையாலேயே விசில் அடிப்பார்கள் என்றார். மேலும் விளையாட்டு மைதானத்தில் தொடங்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடு, தற்போது ஆளும் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது.
