சென்னையில் பீகார் மாநிலத் தம்பதி படுகொலை மற்றும் நந்தனம் அரசுக் கல்லூரி உணவக ஊழியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கியுள்ளன. இந்தச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி தவெக தலைவர் விஜய் அவர்கள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சொந்த மாநில மக்களுக்கு மட்டுமல்ல, பிழைப்புத் தேடி வந்தவர்களுக்கும் கூட இங்கு பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும் அவர் ஆவேசமாகச் சாடியுள்ளார். கொள்ளை அடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் இந்த ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு தவறிவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

​குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தந்து பயத்தை உருவாக்க வேண்டிய அரசு, மெத்தனமாக இருப்பதால் சமூக விரோதிகள் துணிச்சலோடு சுற்றுவதாக விஜய் ஆதங்கம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அவர்கள் தமிழகம் பாதுகாப்பாக இருப்பதாகப் பொய் கூறி வருவதாக விமர்சித்துள்ள அவர், இது வெறும் “விளம்பர மாடல்” ஆட்சி என்று சாடியுள்ளார். தனது ஆட்சியின் இறுதிக்காலத்தை எண்ணிக்கொண்டிருக்கும் முதலமைச்சர், மீதமுள்ள நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என்றும், இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகிவிட்டனர் என்றும் தனது அறிக்கையில் விஜய் எச்சரித்துள்ளார்.