தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில், தவெக-வின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்ட விருதுநகர் அல்லது நாகர்கோவில் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு வலுவான அரசியல் செய்தியைச் சொல்ல விஜய் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது அவர் சென்னை வேளச்சேரி தொகுதியைத் தேர்வு செய்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. பனையூரில் உள்ள அவரது இல்லத்திற்கு மிக அருகிலேயே வேளச்சேரி இருப்பதால், தேர்தல் பணிகளை எளிதாக ஒருங்கிணைக்கவும், தொகுதி மக்களைத் தொடர்ந்து சந்திக்கவும் இது வசதியாக இருக்கும் என அவர் கருதுவதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், வேளச்சேரி தொகுதியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான ‘சென்டிமென்ட்’ காரணமும் இருப்பதாகப் பேசப்படுகிறது. தனது பெயரின் முதல் எழுத்தான ‘V’ (Vijay), தனது கட்சியின் பெயரில் உள்ள வெற்றி (Vettri), மற்றும் போட்டியிடப் போகும் தொகுதி (Velachery) என அனைத்தும் ‘V’ என்ற எழுத்தில் தொடங்குவது ஒரு கூடுதல் பலமாக அமையும் என அவர் நம்புவதாகத் தெரிகிறது. நகரப்புற வாக்காளர்களைக் கவரும் வகையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதாலும், வேளச்சேரி விஜய்க்கு ஒரு பாதுகாப்பான மற்றும் செல்வாக்கான தொகுதியாக இருக்கும் என அவரது கட்சி நிர்வாகிகள் கணித்துள்ளனர்.
