தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

சென்னை நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்தில் (கேண்டின்) பணிக்குச் சேர்ந்த பெண் ஒருவரை, அங்கேயே கேண்டின் மாஸ்டர் மற்றும் சிலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது. தமிழகத்தில் நாள்தோறும் இத்தகைய கொடூரமான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவரும் அவரது கணவர் மற்றும் குழந்தையும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்தியாவையே உலுக்கிய அந்தச் சம்பவத்தின் பதற்றம் இன்னும் குறையாத நிலையில், இன்று அரசு கல்லூரி வளாகத்திலேயே ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

“அரசுக் கல்லூரியிலேயே இக்கொடுமை நடந்துள்ளது குறித்துக் கேட்டால், அப்படி ஒரு சம்பவமே நடந்திருப்பது தெரியாது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகிறார். இந்த அக்கறையற்ற பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்குரியதும் கூட.”

திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே இந்தத் தொடர் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன. இனியும் ‘பொம்மை’ போன்று செயல்படாமல், குற்றவாளிகள் மீது அரசு விரைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்