தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான ரகுபதி ஆற்றிய பேச்சு அவையில் சிரிப்பலை ஏற்படுத்தியது. பல்வேறு அரசு திட்டங்களை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பாராட்டிய அவர், திட்டங்கள் மூலம் மக்களின் மனதில் தலைவர் வாழ்ந்து வருகிறார் என்று கூறினார். அந்த நேரத்தில் முதல்வர் விஜய் உள்ளிட்ட உறுப்பினர்கள் கவனமாக அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து பேசிய ரகுபதி, மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணத் திட்டம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை குறிப்பிட்டு, அவற்றின் மூலம் திமுக தலைவர் மக்களின் இதயங்களில் இருக்கிறார் என்றார். மேலும், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சில திட்டங்களுக்கு தற்போதைய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், சில திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாது என்றும் விமர்சனம் முன்வைத்தார்.

இதற்கிடையில் நிதியமைச்சர் மரிய வில்சன், முந்தைய ஆட்சியில் ஏற்பட்ட கடன் சுமையை சுட்டிக்காட்டி பதிலளித்தார். அதற்கு திமுக தரப்பில் கே.என். நேரு, அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்காகவே கடன் பெறப்படுகிறது; கடன் தொகையை மட்டும் பார்க்காமல், அதனால் நிறைவேற்றப்படும் திட்டங்களையும் கவனிக்க வேண்டும் என்று விளக்கமளித்தார். இதனால் அவையில் சில நிமிடங்கள் வாக்குவாதமும் நடைபெற்றது.

விவாதத்தின் இறுதியில் மீண்டும் பேசிய ரகுபதி, “நாங்கள் செயல்படுத்திய திட்டங்களில் எங்கள் தலைவர் இருக்கிறார். ஆனால் ஓட்டு போடும் போது சின்ன பிள்ளைங்க குறுக்கே புகுந்துட்டாங்க; அவர்களுக்கு எங்கள் திட்டங்கள் தெரியாமல் போய்விட்டது” என்று நகைச்சுவையாகக் கூறினார். இதைக் கேட்ட முதல்வர் விஜய் சிரிப்பை அடக்க முடியாமல் வாய் மீது கை வைத்தபடி புன்னகைத்தார். அந்த தருணம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.