அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி நிர்வாக முடிவுகளில் அதிருப்தி அடைந்துள்ள எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான சில எம்.எல்.ஏ.க்கள், இனி தனி அணியாக செயல்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள தொடர் கருத்து வேறுபாடுகள் தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கட்சிப் பொறுப்புகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் முக்கிய பதவிகள் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியே இந்த நகர்வுக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறப்படும் சில எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் புதிய அரசியல் வியூகத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவையில் வெளிநடப்புக்குப் பிறகு மீண்டும் கூட்டத்தில் பங்கேற்று, கட்சி கொறடா உத்தரவுக்கு உட்படாமல் சுயமாக செயல்படுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து தங்களது தொகுதிகளின் கோரிக்கைகளை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இவை அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் மட்டுமே. இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்போ அல்லது எஸ்.பி. வேலுமணி தரப்போ அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத அரசியல் நகர்வுகள் என்ற நிலையில் மட்டுமே பார்க்கப்படுகின்றன. அடுத்தகட்டத்தில் அதிமுக தலைமையிலிருந்து என்ன நடவடிக்கை வெளியாகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
