உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் சாக்கேத் நகர் பகுதியில் உள்ள தனியார்  பள்ளியில், 2 1/2 வயதுடைய சிறுமி ஒருவரை ஆசிரியர் ஒருவர் அடித்து தவறாக நடந்து கொண்ட சம்பவம், சிசிடிவி காட்சியுடன் வெளியாகி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து குழந்தை தினசரி பள்ளிக்கு செல்லத் தயக்கம் காட்டியதை கவனித்த பெற்றோர், காரணம் என்ன என்று கேட்டபோது, “ஆசிரியை அடிக்கிறார்” என்று குழந்தை கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையடுத்து பெற்றோர் பள்ளியின் CCTV காட்சிகளை பார்க்க, அதில் அசிங்கமாக, திட்டவட்டமாக குழந்தையை அடிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சம்பவத்துக்கு கடும் கோபமடைந்த பெற்றோர், அந்த ஆசிரியருக்கு எதிராக பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், போலீசிலும் அதிகாரபூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது காவல்துறையும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

இதே போல், இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் மற்றொரு பள்ளி ஆசிரியர் மாணவனை வகுப்பறையில் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், ஆசிரியர் மாணவனை கழுத்தில் பிடித்து, சுவரில் தள்ளி, பலமுறை அடித்துள்ளார்.

சம்பவம் நேரடியான வகுப்பின் போது நடந்ததாகவும், மற்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்களுமே பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளன.