சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பூனை, நாய், குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் வீடியோக்கள், சிறு குழந்தைகளின் மனச்செயல்களில் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள், குழந்தைகளை அடிமைகளாக மாற்றி, அக்ரஷன் மற்றும் கொடூரமான பழக்கங்களைக் கொண்டவர்களாக உருவாக்கும் என கேரள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வகை வீடியோக்களில் சில குழந்தைகளுக்கேற்றதல்லாத, வன்முறையான காட்சிகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சேவலை பாம்பை வைத்து கொல்வது, காயப்பட்ட வாத்துகளை சுத்தமாக்கி பராமரிப்பது போன்று நடித்தபின் அதையே சுட்டு சாப்பிடுவது, விமான விபத்தில் காயமடைந்த பூனை, இறுதியில் விமானம் வீழ்ந்ததில் தாயைப் பார்த்து அழுவது போன்ற காட்சிகள் இதில் இடம்பெறுகின்றன.

இவையெல்லாம் மனச்சிதைவு, பழிவாங்கும் சிந்தனை, வன்முறை மீதான ஈர்ப்பு போன்ற மனநிலைகளை குழந்தைகளில் உருவாக்குகிறது. உதாரணமாக, ஒரு பள்ளி மாணவன், வகுப்பில் உள்ள சக மாணவர்களை பேன், பென்சில் உள்ளிட்ட பொருட்களால் குத்தும் கொடூர பழக்கத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் எவ்வளவோ சொல்லியும் அந்த மாணவன் மனதை  மாற்றவில்லை. உளவியல் நிபுணரிடம் அழைத்துச் சென்ற பிறகு, அவன் AI வீடியோக்களில் அடிக்கடி வந்த ‘பூனை ஹீரோ’ பாத்திரங்களால் தாக்கம் அடைந்தது என கண்டறியப்பட்டது. AI வீடியோக்கள் குழந்தைகளில் Hero-worship வன்முறைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சென்னையைச் சேர்ந்த கல்வி உளவியலாளர் டாக்டர் சரண்யா ஜெயகுமாரும், “இத்தகைய வீடியோக்கள் 14 வயதிற்குள் உள்ள சிறுமி, சிறுவர்களிடம் கோபம், சண்டை, தனிமை விருப்பு, பசும்பிள்ளை போல் நடந்துகொள்ளும் பழக்கம், மன அழுத்தம், பள்ளிக்கூடத்திற்கு செல்ல மறுப்பு, மற்றும் பெற்றோரிடம் தீவிர எதிர்ப்பு போன்ற பல நடத்தை சிக்கல்களை உருவாக்கும்” என தெரிவித்துள்ளார்.

எனவே, பெற்றோர்கள் குழந்தைகள் என்ன வீடியோ பார்கிறார்கள் என்பதைக் கவனித்து, அவர்களின் நெட்வொர்க் பயன்பாடுகளை கட்டுப்படுத்துவது, சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதில் வரம்புகளை ஏற்படுத்துவது அவசியம் என மருத்துவ வல்லுநர்களும் வலியுறுத்துகின்றனர்.