மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்துகொண்டிருந்தபோது, சர்ச்கேட் – நல்லசோபரா இடையே சென்றுகொண்டிருந்த பாஸ்ட் லோக்கல் ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயங்கர கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த ரயில்  சென்றுகொண்டிருந்தபோது, ரயிலின் நுழைவு வாயில் கதவு திறந்திருந்ததால் பலத்த மழைத்துளிகள் உள்ளே விழுந்துள்ளன. இதனால் முதலாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த மயங்க் லோஹர் உள்ளிட்ட சக பயணிகள், கதவின் அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு பயணியிடம் கதவை மூடுமாறு கேட்டுள்ளனர். ஆனால், அந்த நபர் கதவை மூட அடம் பிடித்து மறுத்ததால், இருதரப்பிற்கும் இடையே அவையில் கடும் வாய்த்தகராறு ஏற்பட்டு, அது கைலப்பாயாக மாறியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Daily Indian News (@be.indian)

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் உச்சக்கட்ட கோபமடைந்த அந்த மர்ம நபர், திடீரென தனது பையில் வைத்திருந்த கூர்மையான கத்தியை வெளியே எடுத்து, சக பயணியான மயங்க் லோஹர் என்பவரை வெறித்தனமாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மயங்க் லோஹர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நபர் கத்தியால் தாக்கியபோது, ரயிலில் இருந்த மற்ற பயணிகள் யாரும் பயத்தில் அவரைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொலையைச் செய்துவிட்டு தப்பியோடிய அந்த மர்ம நபரைப் பிடிப்பதற்காக மும்பை போலீசார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.