மின்சார வாரியத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று காலை வெளியிட்டார். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தவெக அரசு முற்றிலும் உள்நோக்கத்துடனேயே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நலிவடைந்து கிடந்த மின் துறையை போதிய நிதி ஒதுக்கி காப்பாற்றியவர் மு.க.ஸ்டாலின் என்றும், திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மின் துறை வருவாய் 1.77 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டு, அதிமுக காலத்து வருவாய் பற்றாக்குறை 43 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோதே மின்சார வாரியத்தில் ரூ.1.59 லட்சம் கோடி கடன் இருந்ததாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அதிமுக வாங்கிய கடனுக்காக ரூ.75 ஆயிரம் கோடியை வட்டியாகக் கட்டிய உண்மையை இந்த வெள்ளை அறிக்கையில் தவெக அரசு ஏன் சொல்லவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்சாரக் கொள்முதல் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு, வெளி மாநிலங்களில் மின்சாரம் வாங்கியதால் ஏற்பட்ட செலவினங்கள் போன்ற பல முக்கியத் தகவல்களைத் தங்களுக்கு வசதியாகத் தவெக அரசு வெள்ளை அறிக்கையில் மறைத்து நாடகமாடுவதாகச் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசின் முதல்வர் விஜய் நேற்று பணி ஆணை வழங்கியவர்கள் அனைவருமே திமுக ஆட்சிக் காலத்திலேயே முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள்தான.
ஏதோ தவெக ஆட்சிக்கு வந்த இந்த 40 நாட்களில் அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி, முடிவுகளை அறிவித்தது போல ‘வெளிப்படையாகத் தேர்வு நடந்தது’ என ரீல்ஸ் வெளியிட்டு வருவதாகச் சாடினார். இத்தனை ஆண்டுகள் மின்சார வாரியத்தில் யாருக்குமே பணி உயர்வு வழங்கப்படாதது போல தவெக அமைச்சர் பேசுவதாகவும், தேர்தல் அறிவிப்பு காரணமாகவே கடந்த ஆட்சியில் பணி நியமனங்களும் பதவி உயர்வுகளும் தள்ளிப்போனது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
