முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தொழில் முதலீடுகளுக்கு, தற்போதைய த.வெ.க. அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி விளம்பரம் தேடிக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் தவறுகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், திமுக மீதே தொடர்ந்து குற்றம் சாட்டுவதன் மூலம் தமிழ்நாட்டின் நலனை த.வெ.க அரசு காவு கொடுத்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.

டொயோட்டா நிறுவனம் கர்நாடகாவில் ஏற்கனவே பல ஆண்டுகளாக முதலீடு செய்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் முதலீடு செய்யும் தங்களது இறுதி முடிவை தற்போதைய த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான் அறிவித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அவர், த.வெ.க. அரசின் பொய்களுக்குத் தம்மால் புள்ளிவிவரங்களோடு பதில் அளிக்க முடியும் என்றும், தொழில் முதலீடுகள் குறித்துப் புரிந்து கொள்ளும் திறனற்ற அரசாக இது உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

தொழில் முதலீடுகளை ஒருபோதும் அரசியலாக்கக் கூடாது என்பதில் திமுக தலைவரும், அமைச்சராக இருந்த நானும் உறுதியாக இருந்தோம் என்று குறிப்பிட்டுள்ள டி.ஆர்.பி.ராஜா, இத்தகைய அற்ப அரசியல் தாக்குதல்கள் ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியைத்தான் பாதிக்கும் என எச்சரித்துள்ளார். தனது பதவிக் காலத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், முதலீட்டாளர்களை ஒருபோதும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியதில்லை என்றும், தனக்கு அந்த முதிர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, புதிய ஆட்சியாளர்கள் இனியாவது தங்களது அரசியல் வாதங்களில் வெற்றி பெறுவதற்காக, பல முதலீட்டாளர்களின் பெயர்களைச் சேற்றில் இழுத்து விடாமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.