பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தற்காலிக காலநிலை மாற்றமான ‘எல்-நினோ’ தாக்கத்தின் காரணமாக, நடப்பு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வறட்சி பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால் வழக்கத்தை விட மழைப்பொழிவு குறையக்கூடும் என்பதால், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் வறட்சியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தின் 12 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாகக் கண்டறியப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று மூலம் மழை அளவு குறைந்து வறட்சியால் பாதிக்கப்படும் மாவட்டங்களில், விவசாயிகளுக்குப் பாதிப்பைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வறட்சி பாதிப்புக்குள்ளாகும் என கண்டறியப்பட்ட மாவட்டங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தாங்கி வளரக்கூடிய எள், பயறு வகைகள் போன்ற குறுகிய காலப் பயிர்களைச் சாகுபடி செய்ய மத்திய மானாவரி பயிர் ஆராய்ச்சி நிலையம் பரிந்துரைத்துள்ளது. பொதுவாக தமிழகத்திற்கு வடகிழக்குப் பருவமழை மூலமாகவே அதிக மழைப்பொழிவு கிடைக்கும் என்றாலும், தென்மேற்கு பருவமழையை நம்பியுள்ள மாவட்டங்களின் விவசாயப் பாதிப்புகளைத் தடுக்க இப்போதே உரிய மாற்றுப் பயிர்த் திட்டங்களைத் தயார் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய வேளாண் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
