திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுமலை அடிவாரக் காட்டுப் பகுதியில், வேட்டைக்குச் சென்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக நாட்டுத் துப்பாக்கி வெடித்து ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

​திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் தனது நண்பரான சந்தானத்துடன் இணைந்து சிறுமலை அடிவாரக் காட்டுப் பகுதிக்கு வேட்டையாடுவதற்காகச் சென்றுள்ளார். அங்கு சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும் நாட்டுத் துப்பாக்கியில் கருமருந்து மற்றும் அலுமினிய பால்ஸ்களை அதிவேகமாக நிரப்பும் பணியில் மாணிக்கம் ஈடுபட்டுள்ளார்.

​அப்போது, எதிர்பாராதவிதமாகக் கருமருந்தில் உராய்வு ஏற்பட்டுத் துப்பாக்கி பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணிக்கத்தை மீட்ட சக நண்பர்கள், உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

​இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த நத்தம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், வேட்டைக்கு உடன் சென்ற சந்தானம் என்பவரைப் பிடித்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.