மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளின் குடிநீர் பாட்டிலில் சக மாணவன் ஒருவன் சிறுநீரைக் கலந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்டிலில் இருந்த நீரைக் குடித்த சிறுமிகள், சுவை மாறிக் கிடப்பது குறித்து உடனே பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று புகார் அளித்துள்ளனர்.
ஆனால், புகாரை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர், “வாயில் துர்நாற்றம் அடித்தால் ரூ.10 சாக்லேட் வாங்கிச் சாப்பிடுங்கள்” என்று அலட்சியமாகக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமிகளின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுப் பூட்டுப்போட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் கல்வித்துறை அதிகாரிகளூம் பாதிக்கப்பட்ட சிறுமிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் சக மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். குற்றச்சாட்டுக்கு உள்ளான மாணவரின் பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், அலட்சியமாகப் பதிலளித்த தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நடந்த உண்மை என்ன என்பதைக் கண்டறிந்து இரண்டு நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு வட்டாரக் கல்வி அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்பாகக் கல்வி கற்க வேண்டிய பள்ளியில் இப்படிப்பட்ட அருவருப்பான செயல்கள் நடப்பதும், அதை நிர்வாகம் அலட்சியமாகக் கையாள்வதும் பெற்றோரிடையே கடுமையான அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
