ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப்பாடம் முடிக்காத காரணத்திற்காக ஆசியிரியை கண்டித்ததால், ஆறு வயது சிறுவன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெற்றோர்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

விசாகப்பட்டினம் ஒன் டவுன் பகுதியில் உள்ள ‘லிட்டில் கார்டன்’  பள்ளியில் எல்கேஜி (LKG) படித்து வந்த ஆறு வயது சிறுவன் பிரணய் தேஜ், வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளான். அப்போது அவனிடம் வீட்டுப்பாடம் முடிக்காதது குறித்து வகுப்பாசிரியர் கேள்வி எழுப்பியதுடன், கடுமையாகக் கண்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வகுப்பறையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில், பயந்துபோன சிறுவன் அழுதுகொண்டே நிற்பதும், ஆசிரியர் அவனது உடையையும் டையையும் பிடித்து இழுத்துத் தாக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆசிரியரின் இந்தச் செயலால் அதிர்ச்சியும் மன அழுத்தமும் அடைந்த சிறுவன், ஆசிரியரின் மீதே சாய்ந்து அங்கேயே சுருண்டு கீழே விழுகிறான்.

 


சிறுவன் மயங்கி விழுந்ததைக் கண்ட ஆசிரியரும் பள்ளி நிர்வாகத்தினரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்ட சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தங்கள் அன்பு மகன் திடீரென இறந்துவிட்டதைக் கண்டு பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். வகுப்பறையில் நடந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்ததும் அவர்கள் ஆத்திரமடைந்து, பள்ளிக்கு முன்பாகக் கூடி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்பறையில் சிறுவனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், பெற்றோரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவன் மயங்கி விழுவதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.