லடாக்கின் கார்கில் பகுதியில் வைரலான வீடியோ தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய 25 வயது பெண் தற்போது இந்திய ராணுவத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மினிமார்க் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் படையினருடன் அவர் வாக்குவாதம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இந்நிலையில், அந்த வீடியோ சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும், தான் கூறிய கருத்துகள் தவறான விதத்தில் சமூக வலைதளங்களில் சித்தரிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
லடாக்கில் இருந்து டெல்லி நோக்கி ஒரு குழுவுடன் பயணம் செய்தபோது, மினிமார்க் பகுதியில் சுமார் 6 மணி நேரம் சாலை மூடப்பட்டிருந்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார். முதலில் 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்ததாகவும், மேலும் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அதற்குப் பிறகும் சாலை திறக்கப்படாததால், பயணிகள் மத்தியில் விரக்தி ஏற்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
>
இதையடுத்து அங்கு ராணுவத்தினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும், நிலைமையை தெரிந்துகொள்ள தங்களது குழு அருகே சென்றதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். நீண்ட நேரம் காத்திருந்ததால் ஏற்பட்ட கோபத்தில் தான் பாதுகாப்புப் பணியாளர்களிடம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அப்படி பேசியது தவறு என்பதை தற்போது உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், இந்திய ராணுவத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மினிமார்க்-சோஜி லா-சோன்மார்க் சாலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக லடாக் போலீசார் தெரிவித்துள்ளனர். கார்கில் விஜய் திவஸ் நிகழ்வுகளை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும், மூத்த பாதுகாப்பு அதிகாரிகளின் வாகன அணிவகுப்பு அந்த வழியாக செல்லவிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்தப் பெண் தனது கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்து ராணுவத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளதால், இந்த வைரல் வீடியோ சர்ச்சை புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது.
