கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள இயற்கை எழில் சூழ்ந்த இடுகம்பாளையம் கிராமத்தில், சுமார் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ அனுமந்தராய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பூமியிலிருந்து இயற்கையாகவே பொங்கி வரும் ஏழு தீர்த்தங்கள் சூழ அமைந்திருக்கும் இத்தலத்தில், ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் அழகு சுந்தரனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து வருகிறார்.
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் குலகுருவான ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், இங்கிருந்த சுயம்புப் பாறையைக் கண்டு அதில் அனுமனின் வடிவத்தைப் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கிச் சிறிய ஆலயம் அமைத்ததாகக் கூறப்படுகிறது. ஆறு அடி உயரத்தில் கம்பீரமாக விளங்கும் இந்த ஆஞ்சநேயரின் வலது திருக்கரத்தில் சுதர்சன ரேகையும், இடது கரத்தில் சவுகந்திக மலரும் அமைந்துள்ளன. சீதாபிராட்டியைத் தேடிச் செல்லும் வழியில் தடைகளை வென்ற அனுமன், இப்பாறை மீது அமர்ந்து தவம் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இக்கோயிலின் வலப்புறம் உள்ள சுயம்புப் பாறையில் விநாயகர், சூரியன், சந்திரன், ஆதிசேஷன் மற்றும் சிவலிங்கத்திற்குப் பால் அபிஷேகம் செய்யும் காமதேனு ஆகிய ஆறு தெய்வீக வடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும், கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் மூவர் இங்குள்ள தெய்வங்களை என்றும் வழிப்படுவதாக நம்பிக்கை நிலவுவதால், இத்தலம் ஆன்மீக ஆற்றல் நிறைந்த தலமாகப் போற்றப்படுகிறது.
சுதர்சன சக்கரத்தின் ஆற்றல் கொண்ட இவரைத் தரிசிப்பதால் நவக்கிரக தோஷங்கள், முற்பிறவிப் பாவங்கள் மற்றும் தீராத நோய்கள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி, இவரை மனமுருகி வழிபட மும்மூர்த்திகளின் அருளும் ஒருசேரக் கிடைப்பதுடன், திருமணத் தடைகள் நீங்கி மக்கட் பேறும் நல்கும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
தங்களின் துயரங்களும் குறைகளும் சூரியனைக் கண்ட பனிபோல விலக வேண்டும் என நினைக்கும் பக்தர்கள், தினமும் ஒரு கைப்பிடி அரிசியைச் சேர்த்து வைத்து, 30 நாட்கள் தொடர்ச்சியாக இத்தல ஆஞ்சநேயருக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களின் அனைத்து நியாயமான பிரார்த்தனைகளும் விருப்பங்களும் தடைகளின்றி நிறைவேறுவதாகப் பரவசத்துடன் கூறுகின்றனர்.
