கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமலதா என்ற 21 வயது இளம் பெண், கஜேந்திரன் என்பவரைக் காதலித்து கடந்த ஆகஸ்ட் 14 அன்று உறவினர்கள் முன்னிலையில் கோயிலில் வைத்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கணவர் கஜேந்திரனின் ஆட்டுப் பட்டியில் சுமலதா தங்கியிருந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு, தனது கணவருக்கும் அவரது நண்பர்களுக்கும் உணவைச் சமைத்துப் பரிமாறிய பிறகு, சுமலதா இயற்கை உபாதையைக் கழிக்க தனியாக வெளியே சென்றுள்ளார். அப்போது, கஜேந்திரனின் நண்பரான பொரேயா என்பவர் அந்தப் பெண்ணை ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பொரேயா, துணியால் சுமலதாவின் வாயைப் பொத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தனது சகோதரரான கரையாவையும் அங்கே உதவிக்கு அழைத்துள்ளார்.

இருவரும் சேர்ந்து சுமலதாவின் கழுத்தைத் துண்டால் நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர், குற்றத்தை மறைப்பதற்காகப் பாழடைந்த கிணற்றுக்குள் உடலை வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் தப்பியோடியுள்ளனர்.

இரண்டு நாட்களாகப் பெண்ணைக் காணாமல் தேடி வந்த நிலையில், ஆகஸ்ட் 16 அன்று கிணற்றிலிருந்து சுமலதாவின் சடலம் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், குற்றவாளிகளான பொரேயா மற்றும் கரையாவைக் கைது செய்துள்ளனர். மேலும், கணவர் கஜேந்திரன் உட்பட மற்ற நபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.