ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கணவருக்கு ஜூஸில் விஷம் கலந்து கொலை செய்ததாக மனைவி மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஸ்வகர்மா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மகேஷ் மீனா (27) சந்தேகமான முறையில் உயிரிழந்தார். அவரது மனைவி கவிதா மீனா, காதலன் கணேஷ் மீனா ஆகியோர் இணைந்து இந்தக் கொலைக்கு திட்டம் தீட்டியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கணவரின் மரணம் இயற்கையானது போல காட்ட முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி கவிதா, மகேஷை தன்னுடன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் ஜூஸ் வாங்கிய அவர், அதில் விஷத்தன்மை கொண்ட மாத்திரைகளை கலந்து மகேஷுக்கு கொடுத்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மனைவி மீது சந்தேகம் இல்லாததால் மகேஷ் ஜூஸை குடித்ததாகவும், சிறிது நேரத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கவிதா தனது காதலன் கணேஷுக்கு தகவல் தெரிவித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கணேஷ் அங்கு வந்த பிறகும், உடல்நிலை மோசமாக இருந்த மகேஷை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இருவரும் சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் பல்வேறு இடங்களில் சுற்றியதாக போலீஸார் கூறியுள்ளனர். பின்னர் மகேஷின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மகேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீஸார் சிசிடிவி காட்சிகள், செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் இருவரின் வாக்குமூலங்களை ஆய்வு செய்தனர். கவிதா தெரிவித்த தகவல்களுக்கும் சிசிடிவி காட்சிகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கவிதா மற்றும் கணேஷ் இடையே பல ஆண்டுகளாக காதல் இருந்ததாகவும், திருமணத்துக்குப் பிறகும் அவர்களது தொடர்பு நீடித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மகேஷை கொலை செய்து தங்களது உறவை தொடர திட்டமிட்டதாக போலீஸார் கூறிய நிலையில், கவிதா மீனா மற்றும் கணேஷ் மீனா கைது செய்யப்பட்டுள்ளனர்.