ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் 23 வயது இளம்பெண் பிரீதி, 65 வயது முதியவரை திருமணம் செய்ய மறுத்ததாகக் கூறி கொடூரமாகத் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. திருமணத்திற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார். இதில் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டதாகவும், தற்போது டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பிரீதி, பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்ததாகவும், குடும்பத் தகராறு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்ததாகவும் அவரது மாமா தெரிவித்துள்ளார். இதையடுத்து தர்மேந்திரா மற்றும் லலிதா ஆகியோரின் தொடர்பில் பிரீதி இருந்ததாகவும், அவர்கள் தன்னை மகள் போல் பார்த்துக்கொள்வதாகக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களுடன் இரண்டு மாதங்கள் இருந்த பிறகுதான் வேறு ஒரு உண்மை தெரியவந்ததாக பிரீதியின் மாமா குற்றம் சாட்டியுள்ளார். 65 வயது முதியவருக்கு பிரீதியை திருமணம் செய்து வைக்க திட்டமிட்டதாகவும், இதற்காக ரூ.3 லட்சம் பணம் தொடர்பான ஒப்பந்தம் பேசப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். திருமணத்திற்கு பிரீதி மறுப்பு தெரிவித்ததால், ஆகஸ்ட் 16-ஆம் தேதி அதிகாலை அவர் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. எனினும், ரூ.3 லட்சம் தொடர்பான குற்றச்சாட்டை போலீஸார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
சம்பவத்துக்குப் பிறகு பிரீதியை வீட்டை விட்டு வெளியே செல்லவிடாமல் அறைக்குள் பூட்டி வைத்ததாகவும், அவரது செல்போனையும் எடுத்துக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர் போலீஸாருடன் சென்று கதவைத் திறந்து, பிரீதியை முதலில் ஃபரிதாபாத் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்; பிரீதியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
