தமிழ்நாடு அரசியலில் தற்போது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது ஒரு முரண்பாடான நிர்வாக முடிவு. ஒருபுறம் ஏழை எளிய மக்களின் அன்றாடப் போக்குவரத்து முடக்கப்படும் அதே வேளையில், மறுபுறம் மக்கள் பிரதிநிதிகளுக்கு வாரி வழங்கும் சலுகைகள் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் வருவாய் இழப்பைக் காரணம் காட்டி, விழுப்புரம் கோட்டத்தில் மட்டும் சுமார் 136 புறநகர் பேருந்து சேவைகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. வாரத்தின் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் சுமார் 598 நடைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். டீசல் செலவை மிச்சப்படுத்தவே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், லாப நஷ்டம் பார்க்கும் கார்ப்பரேட் நிறுவனமாக அரசு செயல்படக்கூடாது என்று பொதுமக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழைத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான பொதுப் போக்குவரத்தைப் பறிப்பது அநீதி என்பதே அனைவரின் குமுறலாக உள்ளது.

ஆனால், சாமானிய மக்களின் பேருந்து சேவைக் குறைப்பு குறித்து விவாதிக்கப்பட்ட அதே மேடையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மிகப்பெரிய சலுகை மழையைப் பொழிந்துள்ளது தமிழக அரசு. சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், தமிழகத்தின் 234 எம்.எல்.ஏ-க்களுக்கும் தலா ஒரு புதிய அரசு கார் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிற்காமல், வாகனப் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்காக மாதம் 75 ஆயிரம் ரூபாயும், உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் 25 ஆயிரம் ரூபாயும் என, ஒரு எம்.எல்.ஏ-வுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் கூடுதல் படியும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசு கஜானாவிலிருந்து ஆண்டுக்குச் சுமார் 28 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட உள்ளது. இது போக, கார் வாங்குவதற்கான பல கோடி ரூபாய் செலவு தனி என்பது குறிப்பிடத்தக்கது.

சில நூறு பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏற்படும் டீசல் செலவைக் கணக்குப் பார்த்துச் சேவையை முடக்கும் அரசு, அதே மக்கள் வரிப்பணத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் இவ்வளவு தாராளமாகச் சலுகைகளை வாரி வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. தொகுதிப் பணிகளைச் செய்ய வசதிகள் தேவை என்றாலும், எளிய மக்களின் அன்றாடப் போக்குவரத்தைக் கேள்விக் குறியாக்கிவிட்டு, சொகுசு கார்களை வழங்குவது முரண்பாடான நிர்வாகத்தையே காட்டுகிறது.

தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழைகளைக் காக்க வேண்டிய அரசு, தனது சேவையைக் குறைப்பது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. எம்.எல்.ஏ-க்களின் சொகுசுப் பயணத்தை விட, மாணவர்களின் கல்விப் பயணமும், ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பயணமுமே முக்கியமானது என்பதை உணர்ந்து, நிறுத்தப்பட்ட பேருந்துகளை உடனடியாக மீண்டும் இயக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

மேலும் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் அறிவிப்புக்கு ஏற்கனவே கார் 90 சதவீத எம்எல்ஏக்கள் வைத்துள்ளனர் எனவே இல்லாதவர்களுக்கு வேண்டுமானால் வழங்கலாம் இருப்பவர்களுக்கு வழங்குவதில் எந்த வித அர்த்தமும் கிடையாது என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில் திமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ எழிலனும் திமுக ஆட்சியில் கஜானா காலி ஆகிவிட்டது என்று கூறிவிட்டு இப்பொழுது கார் வாங்குவதற்கு மட்டும் பணம் இருக்கிறதா என்று கண்டனம் தெரிவித்திருந்தார். இதே போன்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் இந்த கார் வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.