வெயில் காலத்தில் இரவில் ஏசியை இயக்கிக்கொண்டு தூங்குவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. குளிர்ச்சியான அறை தூக்கத்துக்கு வசதியாக இருந்தாலும், ஏசியை மிகக் குறைந்த வெப்பநிலையில் நீண்ட நேரம் பயன்படுத்துவது சிலருக்கு உடல் ரீதியான அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக ஏசி வடிகட்டி சரியாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தால், தூசி மற்றும் பூஞ்சை போன்றவை காற்றில் பரவி ஒவ்வாமை தொடர்பான பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும்.
இரவில் ஏசியில் தூங்கிய பிறகு மூக்கு மற்றும் தொண்டையில் வறட்சி அல்லது எரிச்சல் ஏற்படுவது ஒரு அறிகுறியாக இருக்கலாம். ஏசியின் குளிர்ந்த காற்று அறையின் ஈரப்பதத்தை குறைப்பதால் சிலருக்கு இந்தப் பிரச்சினை ஏற்படலாம். இதேபோல், ஏசி வடிகட்டியில் தூசி அல்லது பூஞ்சை படிந்திருந்தால் தும்மல், மூக்கடைப்பு, கண்களில் அரிப்பு, இருமல் போன்ற ஒவ்வாமை அறிகுறிகளும் அதிகரிக்கலாம்.
மேலும், மிகவும் குளிர்ந்த காற்று நேரடியாக உடலில் படும்போது சிலருக்கு காலையில் எழுந்ததும் கழுத்து, தோள் அல்லது தசைகளில் இறுக்கம் மற்றும் வலி ஏற்படலாம். ஏற்கெனவே ஆஸ்துமா அல்லது பிற சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மிகவும் குளிர்ந்த காற்று அறிகுறிகளைத் தூண்டக்கூடும்.
இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க ஏசியை மிகவும் குறைந்த வெப்பநிலையில் வைப்பதைத் தவிர்ப்பது, காற்று நேரடியாக முகம் அல்லது உடலில் படாதபடி பார்த்துக்கொள்வது மற்றும் ஏசி வடிகட்டியைத் தொடர்ந்து சுத்தம் செய்வது நல்லது. அறையில் போதுமான காற்றோட்டமும் இருக்க வேண்டும். அறிகுறிகள் தொடர்ந்து இருந்தாலோ அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகுவது அவசியம்.
