வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களில் பெரும்பாலும் 3-பின் பிளக்குகள் காணப்படுகின்றன. மிக்சி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஹீட்டர் போன்ற பல சாதனங்களில் இந்த வகை பிளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த பிளக்கில் இருக்கும் மூன்றாவது பின் ஏன் மற்ற இரு பின்களை விட பெரியதாகவும் நீளமாகவும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.

3-பின் பிளக்கில் மூன்று இணைப்புகள் உள்ளன. ஒன்று மின்சாரத்தை கொண்டு செல்லும் ‘லைவ்’ பின், மற்றொன்று மின்சாரத்தை திருப்பி அனுப்பும் ‘நியூட்ரல்’ பின். மூன்றாவது பெரிய பின் ‘எர்த்’ அல்லது தரை இணைப்பு பின் ஆகும். மின்சாதனத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், கசிவு மின்சாரம் நேரடியாக தரைக்குச் செல்ல இந்த எர்த் பின் உதவுகிறது. இதனால் மின்சார அதிர்ச்சி ஏற்படும் அபாயம் குறைகிறது.

எர்த் பின் மற்ற பின்களை விட நீளமாக இருப்பதற்கும் ஒரு முக்கிய காரணம் உள்ளது. பிளக்கை சொருகும் போது முதலில் எர்த் இணைப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே அது நீளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தவறுதலாக லைவ் அல்லது நியூட்ரல் துளைகளில் செருகப்படாத வகையில் அது தடிமனாகவும் இருக்கும். இதுவே மின்சார பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய அம்சமாகும்.

இன்று நாம் சாதாரணமாக பயன்படுத்தும் 3-பின் பிளக்கின் பின்னால் இவ்வளவு பாதுகாப்பு அறிவியல் இருப்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எனவே, மின்சாதனங்களைப் பயன்படுத்தும்போது எர்த் இணைப்பை அலட்சியப்படுத்தாமல், தரமான 3-பின் பிளக்குகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது என மின்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.